Friday, February 20, 2009

துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்

ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலத்தை ஆதரிப்பதாக அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாததால் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி M.L.A க்கள், M.Pக்கள் அனைவரும் பதவியை துறந்தனர். இத்தனைக்கும் அங்கு உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை. கொள்கைக்காகவே அவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.ஆனால் தமிழகத்தில் இத்தனை பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தும் பதவியை துறக்க ஒருவரும் முன் வரவில்லை.
இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கூட பதவி சுகத்தை விட மனது வரவில்லை. பதவியை இழந்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று வியாக்கியானம் பேசுகிறார்கள். மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை அரசுக்கு செல்லும் உதவி தடைபட்டிருக்கும். தேர்தல் முன் கூட்டியே வந்திருக்கும். அடுத்து வரும் ஆட்சியாளர்களின் பார்வை வேறுவிதமாக இருந்திருக்கும். போரில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கும்.
இந்த ஓட்டு பொறுக்கிகள்தான் எதுவும் செய்யவில்லை. போராடும் மற்றவர்களையாவது விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. போட்டி பேரணி, போட்டி உண்ணாவிரதம், போட்டி மனிதச் சங்கிலி என்று உண்மையான போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது, ஊடகங்களை மிரட்டி உண்மைச்செய்திகளை வெளியிடாமல் தடுப்பது என்று எத்தனை நாடகங்கள் நடத்தினார்கள்.
மாணவர் போரட்டத்தை ஒடுக்க காலவரையற்ற விடுமுறை அளித்திருக்கிறார்கள். அப்படியானால் இன்னும் ஒரு சில நாட்களில் புலிகளை ஒழித்துக்கட்டி விடுவார்கள். நாம் கல்லூரிகளை திறந்து விடலாம் என்றுதானே திட்டம் போட்டிருக்கிறார்கள். புலிகள் எப்போது அழிவார்கள் என்று இலவு காத்த கிளி போல மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழினமே நெருக்கடியில் உள்ள போது,அன்பழகன் அறிக்கை வெளியிடுகிறார். முதல்வர் மருத்துவமனையில் உள்ளார் அவருக்கு சிறு நெருக்கடி கூட தரக்கூடாது என்று.
கால சக்கரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கடந்த 36 வருடங்களில் உலகில் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டன. மாற்றம் என்ற சொல் கூட மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் நிமிடத்திற்கு ஒரு முறை மாறி மாறி பேசுகிறார்கள். ஆனால் கொண்ட கொள்கையிலும் போராட்டத்திலும் இன்று வரை பிறழாமல் மன உறுதிமிக்க ஒரே தலைவன் பிரபாகரன் தான்.
துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..
இந்திய கருணா
இந்தியாவின் நீரோ மன்னன். துரோகத்தின் மொத்த உருவம். உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம். மனித சங்கிலி, போட்டி குழு, போராட்டம், 'அய்யகோ' தீர்மானம், உயிரை தருவேன், ஆட்சியை இழக்க தயார் என்றெல்லாம் சொல்லி எவ்வளவு நாள் இழுக்க முடியுமோ இழுத்தார். கடைசியில் காங்கிரசையும் தி.மு.க வையும் பிரிக்க சூழ்ச்சி என்றார். ஒற்றுமையாகஇருப்போம் என்று சொல்லியே ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவர். தீக்குளிப்பை அரசியல் செய்யாதீர் என்று சொல்லி சொல்லியே தீக்குளித்தவர்கள் பொண்டாட்டியுடன் சண்டை போட்டுத்தான் செத்தார்கள் என்று தியாகத்தை கொச்சைப்படுத்தியவர். இலங்கை தமிழர் சாவதில் கூட அரசியல் செய்த உலக தமிழின தலைவர் இந்திய 'கருணா' இவர்தான்.
இலங்கை கருணா
துரோகிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்தவர். துரோகம் என்ற‌ வார்த்தையின் முழு அர்த்தம். கோடி எட்டப்பன்களுக்கு சமம். மஹிந்தவின் காசுக்காக‌ இனத்தையே காட்டி கொடுத்தான்.
விஜயமில்லா காங்கிரஸ்காந்த்
எதிர்கால கருணாநிதி. தமிழினத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போது வரப் போகும் காங்கிரஸ் கூட்டணிக்காக மவுனியாக இருந்தார். சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்யும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் ஐ.நா சபையை அணுக வேண்டும் என்றார். ஐ.நா சபையை யார் கேட்பது? மத்திய அரசில் உள்ள சோனியாதான் கேட்க வேண்டும்?ஆட்சிக்கு வராத பொழுதே இவ்வளவு நாடகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? மக்கள் இவரை பெரிதும் நம்பி ஏமாந்தார்கள்.
ஜால்ரா லலிதா
இராஜபக்சேவின் ஜால்ரா தங்கை. தன்னுடைய பாதுகாப்புக்காக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் பல முறை ஏறிய இந்த‌ லலிதாமணி, போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார். குழந்தைச் செல்வங்களை பெற்றிருந்தால் அதன் அருமை தெரிந்திருக்கும்.
காங்கிரஸ்காரர்கள்
இராஜிவ் காந்தியுடன் பூந்தமல்லிவரை வந்து விட்டு பெரும்புதூரில் சிறுநீர் வருகிறது, கழிவறைக்கு செல்கிறேன் என்று சாக்குப் போக்கு சொல்லி விட்டு ஓடியவர்கள்.
தினமலர்
டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற துரோகிகளின் பேட்டியை மூன்று பக்கத்திற்கும், புலிகளின் அழிவுச் செய்தியை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதை ஒரு நாளும் வெளியிடமாட்டார்கள். பார்ப்பன வெறி பிடித்த தமிழின விரோத பத்திரிக்கை.
மருத்துவர் ஐயா
பிள்ளையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார். பிரணாப்புடன் சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை என்பார் மறு நிமிடம் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என்பார். ஒரு பக்கம் மக்கள் தொலைக்காட்சியில் ஈழ புராணம் மறு புறம் மத்திய அரசில் பதவி.
புரட்சிப் புயல்
தப்பான இடத்தில் சரியான டைமில் இருப்பார். புலிகளின் குரல் என்று சொன்னார்கள். ஆனால் போயஸ் கார்டன் முந்தானையிலிருந்தல்லவா குரல் ஒலிக்கிறது.
ஈழ மக்களை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தமிழக மக்களை இந்த துரோகிகளிடமிருந்து அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.
எதிர்வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் நமது மக்கள்தான் இந்து ஜாதி, இனம், கட்சி, தலைவன், தொண்டன் என்று பிரிந்து கிடக்கிறார்களே... 'டெத் ஸ்கோர்' உயர்ந்து கொண்டிருக்கும் போது 'கிரிக்கெட் ஸ்கோர்' கேட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எங்கே தண்டனை வழங்கப் போகிறார்கள்.

No comments: