Saturday, March 20, 2010

இயற்க்கை

அதிகாலை குயிலின் பூபாளம் கேட்டு
விழித்தெழுந்தான் சூரியன் ..

காலச் செடியில் ஓர் புது மலர் விடியல் .
வெண்பட்டுப் போர்வையில் புற்களின் மேல்

ஓராயிரம் பனித்துளி பாயிரம் பாட
ஒவ்வொரு துளியிலும் ஒரு சூரியன் நாட்டியமாட.....

ஓயாது மலையை  குளிப்பாட்டும்   அருவி
பகலில் கதிரவனை காண
வெட்கப் பட்டு இரவில் மேகத்தில்
ஒளிந்து வரும் நிலவுக் காதலி ....

தூரங்கள் ஆயிரம் இருந்தாலும்
மழைத்துளி மூலம் பூமியை
நலம் விசாரிக்கும் வானம் ..

ஆயிரம் முறை தொட்டாலும்
மீண்டும் தொட தீராத காதலுடன்
அலைகடல்..

அந்தி மாலைப் பொழுதில்
தென்றல் புதியதொரு ராகம் பாட
தலையாட்டி ரசிக்கும் நெல் வயல்கள் ....

ஆற்று நீரில் ஆயிரம் சூரியன்
வெள்ளி மீன்கள் துள்ளி குதிக்க
திருவிழா கண்டது மனசு....

தொலைந்து போனது தெரியாமல்
தொலைந்த இடம் புரியாமல்
தொடர்ந்து முகவரி தேடி
காற்று வெளியில் அலையும் மேகங்கள் ....

ஒவ்வொரு மரமாய் நலம் விசாரிக்கும் காற்று
அசைந்தது மரமா இல்லை காற்றா?....

பூமிக்கு குடை பிடிக்கும் மரங்களுக்கு
மட்டும் குளிரே எடுப்பதில்லையோ...

ஆயிரம் ஆயிரம் பூக்கள்
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு  வாசம்...

எத்தனை பூக்கள் மலர்ந்தாலும்
எந்தனை பூக்கள் மறைந்தாலும் ....

பூக்களின் வாசம் குறைய வில்லை
மனிதனின் நேசமும் மாறவில்லை
ஒற்றை காலில் தாமரையின் தவம்
யாருக்காக?.....

ஓயாது சூரிய காதலனை
நினைத்து கனவு காணும் அல்லி....

தான் உடுத்தியது பட்டென்று
தெரியாமல்
பறக்கும் வண்ணத்து பூச்சி....

ஆயிரம் காற்றாடி இருக்கலாம்
தொட்டு தழுவி மென்மையாய்
சுகம் தரும் தென்றல் போல் வருமா...

வெண் பட்டுப் பனித்துளி
பச்சை மரகத மரங்கள்
சிவப்பு செவ்விதழ் கோவை
அந்தி மஞ்சள் வானம்......

கருப்பு கூந்தல் மேகம்
கூந்தலில் ஆயிரம் விண்மீன்  மலர்கள்....

வாழ்கையை ரசிப்பவன் மனிதன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்..