Saturday, October 4, 2008

Biofuel குறித்த கட்டுரை


Biofuel குறித்த கட்டுரை

''இங்கிருந்து பார்த்தால் நம் பூமி நீலமும் பசுமையும் கலந்த ஒரு அழகிய பந்து போல காட்சியளிக்கிறது... காம்ரேட்''-இது 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதன் முதலில் விண்ணுக்குச் சென்ற சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ரேடியோ மூலம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரிடம் மனம் எல்லாம் மகிழ்ச்சி பூரிக்க உணர்ச்சிவசப்பட்டு சொன்னது...அதே ககாரி்ன் இன்று உயிரோடு இருந்து, மீண்டும் விண்வெளிக்குச் சென்றிருந்தால் பூமி இப்போது இருக்கும் கோலத்தைப் பார்த்து அங்கேயே அலறித்துடித்து, மயங்கியிருப்பார்.ககாரின் பார்த்த பூமி இப்போது இல்லை.. அவர் பார்த்த பசுமையும் இல்லை.. மரங்களை வெட்டியும், கனிமங்களை, பெட்ரோலியத்தை தோண்டியும் புண்ணாகிவிட்டோம் பூமியை.'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் மழைக் காடுகளின் (Rain forest) விஸ்தாரம் கடந்த 50 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவுக்கு சுருங்கிப் போய்விட்டது. சர்வதேச சட்டங்கள் போட்டாலும் இன்னும் அங்கே 'காடுவெட்டல்' தொடர்ந்து கொண்டிருக்கிறது.அதே போல பனிப் போர்வை போர்த்திய சைபீரியாவில் எண்ணெய் தோண்ட ஆரம்பித்து அந்தப் பகுதியையே பெட்ரோலிய கசடாய் மாற்றிவிட்டது ரஷ்யா.தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கத்தால் வெளியேறும் 'கிரீன் ஹவுஸ் கேஸ்' (Greenhouse gases) பூமியின் வெப்பத்தை தொடர்ந்து உயரச் செய்து கொண்டிருக்கின்றன.கிரீன் ஹவுஸ் கேஸ்களில் மிக முக்கியமானவை நீராவி, கார்பன் டை ஆக்ஸைட், குளோரோபுளூரோகார்பன் (Chlorofluorocarbon-CFC) எனப்படும் மீத்தேன், ஈத்தேன் ஆகியற்றின் மறு உருவங்கள் மற்றும் ஓஸோன்.நீராவி நல்லது தானே.. அது எப்படி வெப்ப நிலையை கூட்டும் என்கிறீர்களா. உலகின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது மேகங்களும் அவை தாங்கியிருக்கும் நீராவியும் தான்.அதே போல ஓஸோன் மண்டலம் தானே நம்மை அபாயகரமான சூரிய-விண் கதி்ர்வீச்சுக்களில் இருந்து காக்கிறது. அது எப்படி புவியின் வெப்பத்தைக் கூட்டும்?இது பூமி்க்கு 10 முதல் 50 கி.மீ. உயரத்தில் இருக்கும்போது தான் (இது தான் ஓஸோன் லேயர்) 'ஆபத்பாந்தவன்'. சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு கொண்ட போட்டான்களை (Photons) தடுத்து விண்ணுக்கே திருப்பி விடும் மாயஜாலம் தான் ஓஸோன்.ஆனால், இதே ஓஸோன் நம் வளி மண்டலத்தில், அதாவது பூமிக்குள் சுற்றினால் அது அபாயம். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (atoms) கொண்டது தான் ஒரு ஓஸோன் மூலக்கூறு. இது பூமிக்குள் உலாவும் போது நம் உடம்புக்கும் நல்லதில்லை, பூமிக்கும் நல்லதில்லை. இது நம் நுரையீரலை பதம் பார்ப்பதோடு புவியின் வெப்ப நிலையை உயர்த்தும் வேலையையும் பார்க்கிறது.கண்ணதாசன் சொன்னது மாதிரி.. 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் எல்லாம் செளக்கியம்'. இடம் மாறி வந்தால் பிரச்சனை தான்.அதே போல மீத்தேன், ஈத்தேன் ஆகியவை தனியே இருக்கும்போது பிரச்சனையில்லை. அவை குளோரின், புளோரினுடன் சேர்க்கப்பட்டு (CFC-களாக மாற்றப்பட்டு) நம் அலுவலக-வீட்டு ஏசி, ரெப்ரிஜிரேட்டர்களில் குளிரிவிப்பானாக பயன்படுத்தப்படும்போது தான் சிக்கல்.இந்த CFC வளி மண்டலத்தைத் தாண்டி மேலே பயணிக்கும்போது ஓஸோனில் ஓட்டை போடுகின்றன.இப்படி போகிறது.. கிரீன்ஹவுஸ் கேஸ்களின் தாக்கம்.சைக்கிள்களுக்குப் பேர் போன சீனாவில் கார்கள் பெருக்கம், வளி மண்டலத்தை சல்பர்-டை ஆக்ஸைட் மண்டலமாக மாற்றிவிட்டது. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் அவ்வப்போது வாகன-தொழிற்சாலை புகைகளால் ஏற்படும் புகை மூட்டம் அந்த நாடுகளையே பல வாரங்கள் ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.(பெய்ஜிங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட புகை மூட்டம் ஒலிம்பிக் போட்டிகளையே கேள்விக்குறியாக்கிவிட, அங்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நல்ல வேளையாக மழை பெய்து புகையை கலைத்தது.)இப்படி பூமியை நாம் படாதபாடு படுத்த பதிலுக்கு பூமியும் நமக்கு பாடம் புகட்ட ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால், அதன் தாக்கம் இந்த நூற்றாண்டில் தான் மிகவும் வலுவாக உணரப்படுகிறது.'எல் நினோ' (El NiÑo ), 'லா நினா' (La NiÑa) ஆகிய கடலில் ஏற்படும் வழக்கமான புவியியல் மாற்றங்கள் டிராபிக்ஸ் (Tropical zones) எனப்படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் கன மழையையும் டெம்பரேட் (Temperate zones) எனப்படும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கடும் வறட்சியையும் ஏற்படுத்தி விவசாயத்தையையும் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு வருகின்றன.பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக பசிபிக் பெருங்கடலின் மேல் மட்டத்தில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம் தான் எல் நினோ, லா நினா. இந்த மாற்றங்கள் பல மில்லியன் ஆண்டுகளாய் ஏற்பட்டு வருவது தான். இதனால் ஏற்படும் கடல் நீரோட்ட மாற்றங்கள், வெப்ப நிலை மாற்றங்களை பூமி மில்லியன் ஆண்டுகளாய் சந்தித்துக் கொண்டே தான் வருகிறது.ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்பின் அளவு ஆண்டுகாண்டு அதிகரித்துக் கொண்டே வருவது தான் புதிய கவலையை பரவச் செய்துள்ளது.மேலே சொன்ன எல்லா விஷயங்களாலும் உடனடியாக பாதிக்கப்படுவது விவசாயம் தான். முன்பெல்லாம் விவசாயம் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்தப் பகுதியோ, அந்த நாடோ தான் சிக்கலை சந்திக்கும்.ஆனால், உலகமயமாக்கல் எல்லா நாடுகளையும் சிலந்தி வலை மாதிரி பின்னிப் போட்டுவிட்டதால், ஆஸ்திரேலியாவில் மழை பெய்யாவிட்டால் தென் அமெரிக்காவில் கோதுமை விலை ஏறும் நிலை உருவாகிவிட்டது.எப்போதுமில்லாத வகையில் ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 7 ஆண்டு தொடர் வறட்சி உலகம் முழுவதுமே கோதுமையின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. காரணம், உலகின் மிகப் பெரிய கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா தான்.அங்கு விளையும் கோதுமையை நம்பி பல நாடுகள் கோதுமை உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. கோதுமை விளைந்து வந்த அந்த நிலங்களில் இப்போது பயோ பியூல் (bio-fuel) தயாரிப்புக்கு உதவும் மக்காச்சோளம், சோயா, ஜெட்ரோபா ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.காரணம், கோதுமையை விட இந்த பயோ பியூல் பயிர்களில் கிடைக்கும் பல மடங்கு லாபம்.இப்படி சாப்பாட்டை விட்டுவிட்டு பயோ-பெட்ரோல் தயாரிப்பில் பல நாடுகளில் இறங்கிவிட்டதற்குக் காரணம், கச்சா எண்ணெய்யின் விலை 'குண்டக்க மண்டக்க' உயர்ந்தது தான்.இதனால் 'பயோ பியூல்' தாவரங்கள் உற்பத்தியாகும் பரப்பு விரிந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதன் காரணமாய் உலகம் முழுவதும் இப்போது ஒரு புதிய போர் மூண்டு வருகிறது...அது வயிறுகளுக்கும் வாகனங்களின் பெட்ரோல் டாங்குகளுக்கும் இடையே மூண்டுள்ள நவீன போர்...!

1 comment:

flower said...

i am poobalan.i think you are very very talented person. you know all the subjecta(physics,chemistry,computer,tamil,politics,...........)unga kavithai ellam paditthu partthen.very nice.